Monday, July 21, 2014

சிந்தனைகள் சிறகடிக்கும்

   சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாம் தாழ் இடாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாம் திரை இடாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
அவற்றிற்கு நாணம் பழகாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
நாம் எதற்கும் அடிமை ஆகாமல் இருந்தால்
சிந்தனைகள் சிறகடிக்கும்
நாளைய தலைவன் நாம் தான் என்ற
எண்ணம் நம் மனதில் ஆலம் வேராய் இருந்தால்
சிந்தனைகள் தான் சிறகடிகட்டுமே !!!!

Wednesday, October 17, 2012

தேன்மிட்டாய்.....

ள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் சரி ..
பள்ளி விடுமறை நாட்களிலும் சரி ...
எங்கள் வீட்டின் எதிரே உள்ள அந்த சிறிய பெட்டி கடையில் இருக்கும் தேன்மிட்டாய்க்கு நான் அடிமை ..
இன்று காணமல் போன ஐந்து பைசா, பத்து பைசா , இருபது பைசாவிற்கு அன்று மிகப்பெரும் கீராயக்கி,ஐந்து பைசாவிற்கு சிறிய தேன்மிட்டாய் , இருபது பைசாவிற்கு பெரிய தேன்மிட்டாய் என்று இரண்டு வகை தேன்மிட்டாய்கள் வேறு.. அந்த தேன்மிட்டாயில் என்ன என்ன கலந்து இருக்கிறதோ.. இந்த பையனுக்கு ஏன் தான் இத்தனை பைத்தியமோ தெரியவில்லை, அங்கலாயித்து  போவாள் அன்னை , அத்தையோ வரும்போதெல்லாம் என் கையில் இரண்டு ரூபாயை திணித்து உனக்கு வேண்டும் என்கிறதை வாங்கி தின்னு என்று லஞ்சமாய் அம்மாவிற்கு தெரியாமல் பாசத்தை பொழிவாள், பாட்டியோ தேன்மிட்டாய் அதிகமாய் தின்றால் உட்காரும் இடத்தில் எறும்பு கடிக்கும் என்று பயமுறுத்துவாள் , சித்தியோ வாங்கி கொடுக்க மனம் இருந்தும் கூட்டாய் இருக்கும் குடும்பத்தில் யாரிடமும் வாங்கி கட்டிக்கொள்ள விளையாமல் அமைதியாய் இருப்பாள் , இருந்தாலும் எனக்கோ அந்த தேன்மிட்டாயின் மீது இருந்த ஈர்ப்பு குறைந்த பாடில்லை, மழை அடித்தாலும் புயல் வீசினாலும் நாள் ஒன்றிற்கு ஒரு மிட்டாய் சாப்பிடாமல் இருந்ததில்லை, யார் மீது கோபம் இருந்தாலும் உண்ணும் உணவை விடுவேனே அன்றி தேன்மிட்டாயை அல்ல ... அந்த தெருவில் இருந்து வேறு வீட்டிற்கு குடியேறினோம் .. அங்கு தேன்மிட்டாய் கடையை போன்று பெட்டிக்கடைகள் அவ்வளவாக இல்லை ... மேலும் தேன்மிட்டாய் பெற்று தர யாரும் முன் வரவில்லை .. நாட்கள் கடந்தோடின ... காலத்தின் கோலத்தில் தேன்மிட்டாயையும் அந்த சிறிய பெட்டி கடையையும் அங்கு இருக்கும் பெரியவரையும் மறந்து தான் போனேன் ... பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த பழைய தெருவிற்கு அந்த தேன்மிட்டாய் விற்கும் பெட்டி கடையை தேடி சென்றேன்.. இன்றோ ஐந்து , பத்து , இருபது பைசாக்கள் புழக்கத்தில் இல்லை .. கண்டிப்பாக என் தேனமிட்டாயின் விலையும் உயர்ந்திருக்கும் என்று ஐம்பது பைசா அளவில் இருக்கும் சிறிய ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு சென்றேன் ... தெருவே மாறி இருந்தது.. அந்த பெட்டிக்கடை இருந்த இடத்தில் யாரோ ஒருவர் பெரிய வீடு ஒன்று கட்டி இருந்தார்....இன்று அங்கு அவ்வளவாக ஓட்டு வீடுகளும், வீட்டை ஒன்றிய பெட்டி கடைகளும் , அங்கு வித விதமான பிளாஸ்டிக் பைகளில் தொங்கி கொண்டிருக்கும் தேன்மிட்டாயிகளும், அதற்கு கூடி நிற்கும் சிறுவர்களும் , அந்த தேன்மிட்டாய்கள் விற்ற விலைகளும் காணமல் போயிருந்தது .. அன்று நாணயமானவர்களும் புழக்கத்தில் இருந்த நாணயங்களுக்கும் மதிப்பு இருந்தது .. இன்றோ எதற்கும் மதிப்பு இல்லை .. நாணயமான அவைகளும் புழக்கத்தில் இல்லை , வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றபொழுது அங்கு புழக்கத்தில் இருந்த ஐந்து செண்டுகளை (பைசாக்கள்) பார்க்கையில், அங்கும் தேடினேன் .. அந்த ஐந்து செண்டுகளுக்குகாவது என் தேன்மிட்டாய் கிடைக்குமா என்று.........

Friday, March 25, 2011

என் அருமை கண்ணம்மா

என் அருமை கண்ணம்மா
உன் மனதில் என்னம்மா
உன் அவன் உனக்கு பக்கமா
இல்லையே என்ற வருத்தம்மா
நாங்கள் எல்லாரும் இருந்தும்மா
உன் மனதில் கவலை தோன்றும்மா
காதலில் தனிமை தானம்மா
உன் அன்பை பெறுக்கும் கணிதம்மா
வேம்பை உண்ட நாவிற்கு
சர்க்கரை தான் அமிழ்தம்மா
தனிமை இனிமை தான் என்று
அவனை பார்த்த பின்தான் உனக்கு புரியும்மா
காலமும் நேரமும் தானம்மா
உன்னை அவனிடம் சேர்க்கும் பாரம்மா
அதுவரை அமைதியாய் தானம்மா
நீ நம்பிக்கையுடன் இருந்து பாரம்மா
காதலை பற்றி உனக்கு தான்
நான் எடுத்து சொல்ல வேண்டும்மா ????

Wednesday, March 23, 2011

வாழ்வு

தரையில் விழுந்த பனிக்கட்டியாய் தான்
இந்த வாழ்வும் நமக்கு இருக்கிறதே
கடும் வெப்பத்தில் உருகும் பனியாய் தான்
காலம் நம்மை உருக்குகிறதே
நீராய் மாறி ஓடினாலும்
பின்னர் ஆவியாய் மாறி வானில் கலந்தாலும்
மீண்டும் மழையாய் பொழிந்தோமே
இந்தப் புவியில் விதையாய் விழுந்தோமே
பொழியும் மேகம் போகும் வழியில்
மீண்டும் பிறந்து வாழ்கின்றோம்
வந்து போன சுவடை மறந்து
மீண்டும் மீண்டு மாண்டு மடிகின்றோம்

Monday, March 7, 2011

மகளிர் மசோதா

மதியாளனவனின் மதிப்பை
பெண்பாற் கொண்டு
மதிப்பெண்ணாய் மதிப்பிடும்
இவ்வையத்தில் ஏனோ
மறுக்கின்றனர் அரசாட்சியில்
முப்பத்தி மூன்று சதவிகிதத்தை
உயர்த்துவதற்கு
மதியாள் அவளின் பங்களிப்பை

Monday, February 14, 2011

தனிமையின் நிமிடங்களில்

வைத்தவை வைத்தபடி
வைத்த இடத்தினில் இருக்க
அமைதியாய் கிடக்கிறேன்
விளக்கணைக்க மறந்தபடி நான்
அக்கரையில் உள்ளோர்
அக்கறையுடன் இருக்க
இக்கரையினில் அக்கறையைத் தேடி
கரைந்துதான் போனேன்
சக்கரையாய் கண்ணீரினில் நான்
திரை கடல் ஓடியும்
திரவியம் தேடினேன்
தேடிய பின் பார்த்தால்
தனிமையில் திரிகிறேன்
தனிமையின் நிமிடங்களில்
கண்ணயர்ந்து போகிறேன் நான்

Thursday, January 20, 2011

கண்ணாடி

கண்ணிரண்டு இருந்தால்
கண்ணிமைக்க மறக்குமடி
வாயொன்று இருந்தால்
உந்தன் அழகை பற்றி பாடுமடி
காலிரண்டு இருதால்
உந்தன் பின்னால் நடக்குமடி
உயிரொன்று இருந்தால்
உனக்கதை தருமடி
உன் முன்னாடி
இருக்கும் கண்ணாடி...